விருத்தாசலம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; என்.எல்.சி. தொழிலாளி பலி
விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் என்.எல்.சி. தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கம்மாபுரம்,
விருத்தாசலம் அடுத்த அரசக்குழியை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர்(வயது 47). இவர் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி(37). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று பிரான்சிஸ் சேவியர் நெய்வேலியில் இருந்து அரசக்குழிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கடலூர்-விருத்தாசலம் சாலையில் அரசக்குழி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று பிரான்சிஸ் சேவியர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரான்சிஸ் சேவியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரோக்கியமேரி, ஊ.மங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story