பா.ஜனதாவினர் மீதான வழக்குகள் வாபஸ்; கர்நாடக அரசு முடிவு
திப்பு ஜெயந்தி விழாவை எதிர்த்து போராட்டம் நடத்திய பா.ஜனதாவினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, திப்பு ஜெயந்தி அரசு விழாவாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் திப்பு ஜெயந்தி அரசு விழாவாக நடத்தப்பட்டு வந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு வந்த குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியிலும் இது தொடர்ந்து நடைபெற்றது. திப்பு ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாட பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
அக்கட்சியினர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். அது சில இடங்களில் வன் முறையில் முடிந்த நிகழ்வும் உண்டு. இது தொடர்பாக பா.ஜனதா நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. அப்போது எடியூரப்பா, பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் கட்சியினர் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை வாபஸ் பெறுவோம் என்று அறிவித்தார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. திப்பு ஜெயந்தியை அரசு விழாவாக கொண்டாடும் அரசின் முடிவை எடியூரப்பா ரத்து செய்துள்ளார். இந்த நிலையில் திப்பு ஜெயந்தியை எதிர்த்து போராட்டம் நடத்திய பா.ஜனதாவினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story