குளச்சல் அருகே நள்ளிரவில் விபத்து ; ஆட்டோ டிரைவர் பலி
குளச்சல் அருகே நள்ளிரவில் கார்-ஆட்டோ மோதிக்கொண்டதில் ஆட்டோ டிரைவர் பலியானார். மேலும் மின்கம்பத்தில் கார் மோதியதில் டிரான்ஸ்பார்மர் உடைந்து விழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
குளச்சல்,
குளச்சல் அருகே உள்ள குறும்பனையை சேர்ந்தவர் சகாய ரமேஷ் நாயகம் (வயது 33), ஆட்டோ டிரைவர். இவர் குளச்சல் ஆட்டோ நிறுத்தத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். தற்போது, இவர் குடும்பத்துடன் மணவாளக்குறிச்சி அருகே முட்டத்தில் வசித்து வருகிறார்.
இதனால், இவர் தினமும் குளச்சலுக்கு வந்து ஆட்டோ ஓட்டி விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம் போல் வேலை முடிந்ததும் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
கொட்டில்பாடு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே செல்லும்போது, எதிரே குளச்சல் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. காரில், குளச்சலை ேசர்ந்த அமீர் அலி, அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேர் இருந்தனர். திடீரென காரும்-ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. காரும் சாலையில் தாறுமாறாக ஓடி அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. கார் மோதிய வேகத்தில் மின் கம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய டிரான்ஸ்பார்மர் உடைந்து கீழே விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காரில் இருந்த அமீர் அலி குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஆட்டோ கவிழ்ந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி சகாய ரமேஷ் நாயகம் படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், குளச்சல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த சகாய ரமேஷ் நாயகத்தை மீட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சகாயரமேஷ் நாயகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சகாய ரமேஷ் நாயகத்தின் தந்தை சூசைநாயகம், குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சகாய ரமேஷ் நாயகத்துக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story