வேட்பு மனு பரிசீலனை: தி.மு.க.வினர் சாலை மறியல்


வேட்பு மனு பரிசீலனை: தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Dec 2019 4:00 AM IST (Updated: 18 Dec 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

செங்கத்தில் பா.ம.க. வேட்பாளர் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கம், 

செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளுக்கான ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று முன்தினம் வரை அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும், சுயேச்சைகள் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று வேட்புமனுக்களின் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில் செங்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரமனந்தல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான பா.ம.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனு செய்திருந்தன.

பரிசீலனையின் போது பா.ம.க. வேட்பாளரின் வேட்பு மனு முழுமையாக இல்லை எனவும், அதனால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் அலுவலர் பா.ம.க. தரப்பில் அளிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் சரியாக உள்ளதால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய முடியாது என கூறி வேட்பாளரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார்.

இதை கண்டித்து தி.மு.க. சார்பில் தேர்தல் அலுவலர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி திடீரென புதுவை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒன்றிய அலுவலகத்தின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story