ராமநாதபுரம் அருகே, ஊசிவால் வாத்துகளை வேட்டையாடியவருக்கு அபராதம்
ராமநாதபுரம் அருகே ஊசிவால் வாத்துகளை வேட்டையாடியவரை வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனவர் மதிவாணன் உள்ளிட்டோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி அருகில் மர்ம நபர் ஒருவர் வனத்துறையினரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். வனத்துறையினர் விரைந்து சென்று அவரை மடக்கி விசாரித்தபோது ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்த முருகன்(வயது43) என்று தெரிந்தது.
அவரிடம் சோதனையிட்டபோது பறவைகளை வேட்டையாடி கொண்டு சென்றது தெரிந்தது. வனத்துறையினர் அந்த பறவைகளை பரிசோதித்தபோது அவை ஊசிவால் வாத்துகள் என்பது தெரிந்தது. இந்த பறவைகளை திருஉத்தரேகாசமங்கை மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளில் குத்துக்கன்னி எனப்படும் கன்னியை பயன்படுத்தி பிடித்ததாக தெரிவித்தார்.
நீர்நிலைகளில் பறவைகள் வரும் வழிகளில் இந்த குத்துக்கன்னிகளை பரப்பி வைத்து ஒதுக்குபுறமாக காத்திருப்பதாகவும், அந்த நீர்நிலைகளில் இரை தேடி வரும் பறவைகள் நடந்து செல்லும் போது பரப்பி வைக்கப்பட்டுள்ள கன்னிகளில் கால்கள் சிக்கி பறக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது விரைந்து சென்று இந்த பறவைகளை பிடித்து கொள்வதாகவும், இறைச்சிக்காக இந்த பறவைகளை பிடித்து செல்வதாகவும், மருத்துவ குணம் மிகுந்தது என நம்பப்படுவதால் இதனை மக்கள் அதிகம் விரும்பி வாங்குவதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 7 ஊசிவால் வாத்துகளை வனத்துறையினர் கைப்பற்றி ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். வன உயிரின காப்பாளர் அசோக்குமார், மாவட்ட வன அலுவலர் அருண்குமார் ஆகியோர் இந்த பறவைகளை பார்வையிட்டனர். இந்த பறவைகள் ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதியில் வரத்தொடங்கி மார்ச் மாதம் வரையில் இங்குள்ள நீர்நிலைகளில் தங்கி இனப்பெருக்கத்தில் ஈடுபடுபவை.
இந்தியாவில் இந்த பறவைகள் இருந்தாலும் பெரும்பாலும் பருவநிலையை எதிர்நோக்கி ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்த பறவைகள் அதிகம் வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். 1972-ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் அட்டவணை 4-ல் வரக்கூடிய பறவை என்பதால் வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
இதன்பின்னர் இந்த 7 ஊசிவால் வாத்துகளையும் வனத்துறையினர் ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.
Related Tags :
Next Story