உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Dec 2019 4:15 AM IST (Updated: 19 Dec 2019 2:27 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வி‌‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

மேட்டூர் சூரப்பள்ளி அருகே உள்ள பள்ளக்கானூர் பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் என்கிற பெருமாள் (வயது 45), விவசாயி. இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவி, மகன், மகள்கள் உள்ளனர். பெருமாளுக்கு சொந்தமான விவசாய நிலம் அந்த பகுதியில் உள்ளது. இதன் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனாலும் அவரது விவசாய நிலத்தில் இருந்த மரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் மனவேதனை அடைந்த பெருமாள் கடந்த 14-ந்தேதி வி‌‌ஷம் குடித்தார். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார்.

முற்றுகை போராட்டம்

இதையொட்டி அவரது மனைவி அன்னக்கிளி மற்றும் உறவினர்கள், பெருமாள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உடலை வாங்க மறுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிடவில்லை. இது குறித்து பெருமாள் மகன் சக்திவேல் கூறியதாவது:-

எங்களுக்கு சொந்தமான நிலத்தின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக நிலத்தில் இருந்த தென்னை, புளிய மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் எனது தந்தை மனம் உடைந்து வி‌‌ஷம் குடித்தார். சிகிச்சை பலனின்றி இறந்து போனார். எனவே எனது தந்தையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும். அது வரை எனது தந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. உடலை வாங்கவும் மாட்டோம், என்று கூறினார். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story