திருப்பூரில் பிரியாணி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு


திருப்பூரில் பிரியாணி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Dec 2019 3:30 AM IST (Updated: 19 Dec 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பிரியாணி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து அங்கிருந்த தரமற்ற 20 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மணி, தங்கவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காங்கேயம் கிராஸ் ரோடு, தாராபுரம் ரோடு பகுதிகளில் உள்ள பிரியாணி கடைகளில் ஆய்வு செய்தனர்.

பிரியாணி செய்யப்படும் இடம், பயன்படுத்தப்படும் இறைச்சி, பொரிப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகியவற்றின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வேகவைக்கப்பட்ட ஆடு மற்றும் கோழி இறைச்சியை குளிர்சாதன பெட்டியில் வைத்து அவற்றை மீண்டும் பயன்படுத்த வைத்திருந்தது தெரியவந்தது. அவ்வாறு வைக்கப்பட்டு இருந்த தரமற்ற 16 கிலோ இறைச்சி மற்றும் அதிகப்படியாக நிறம் சேர்க்கப்பட்ட 4 கிலோ கோழி இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். பிரியாணியை பார்சல் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட 4 கிலோ பாலித்தீன் பைகள் கைப்பற்றப்பட்டது.

கெட்டுப்போன இறைச்சியை பிரியாணி செய்ய பயன்படுத்தக்கூடாது. செயற்கை நிறமியை இறைச்சிகளில் சேர்க்கக்கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் இறைச்சியை பொரிக்க பயன்படுத்தக்கூடாது. புதிய எண்ணெய், பயன்படுத்திய எண்ணெய், கழிவு எண்ணெய் என்று தனித்தனியாக பராமரிக்க வேண்டும்.

வாழை இலையை பார்சல் செய்ய பயன்படுத்த வேண்டும். தயார் செய்யப்பட்ட, பரிமாறுவதற்காக உள்ள உணவுகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். இவ்வாறு கடைகளில் பயன்படுத்தப்பட்ட கழிவு எண்ணெயை பயோடீசல் தயாரிக்க விற்பனை செய்யலாம் என்றும் அறிவுறுத்தினார்கள்.

Next Story