ஆம்பூர் அருகே, 2-வது திருமணம் செய்த பெண் கொலை - பிணம் வனப்பகுதியில் வீச்சு
ஆம்பூர் அருகே 2-வது திருமணம் செய்த பெண் கொலை செய்யப்பட்டு, உடல் வனப்பகுதியில் வீசப்பட்டு கிடந்தது.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி (வயது 24). இவருக்கும், போச்சம்பள்ளியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கணவரை பிரிந்து தனது தாயார் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு கே.ஜி.எப். பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. மகேஷ் பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். ரேவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டகுண்டாவில் உள்ள தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் கணவருடன் செல்போனில் பேசுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அதே ஊரில் வனப்பகுதி எல்லையோரம் சுண்டக்காபாறை என்ற இடத்தில் ரேவதி கழுத்தில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், ரேவதி அணிந்திருந்த 10 பவுன் நகை, செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து, நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story