திருப்பத்தூர் அருகே, முகம் சிதைத்து கொல்லப்பட்டவர் வழக்கில் தம்பி உள்பட 2 பேர் கைது


திருப்பத்தூர் அருகே, முகம் சிதைத்து கொல்லப்பட்டவர் வழக்கில் தம்பி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2019 11:00 PM GMT (Updated: 19 Dec 2019 8:19 PM GMT)

திருப்பத்தூர் அருகே முகம் சிதைத்து கொல்லப்பட்டவர் வழக்கில் அவரது தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தாலுகா உடையாமுத்தூர் அருகே உள்ள அண்ணாநகர் கல்குவாரியில் கடந்த 9-ந் தேதி 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் கொலைசெய்யப்பட்டு கிடந்தவர், கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் பெத்தனப்பள்ளி ஜெட் பள்ளம் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 40) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பெங்களூருவில் உள்ள இனிப்பு கடையில் பணிபுரியும் குமார் (23),(கொலை செய்யப்பட்ட வெங்கட்ராமனின் தம்பி), திருப்பத்தூர் தாலுகா பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிங்காரம் (35), கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் கொட்டக்காரன் கிராமத்தை சேர்ந்த குமாருடைய நண்பன் கார்த்திக் (27) ஆகிய 3 பேரும் சேர்ந்து, வெங்கட்ராமனை கடந்த 9-ந் தேதி உடையாமுத்தூர் அண்ணாநகர் கல்குவாரிக்கு அழைத்து வந்து நன்றாக குடிக்க வைத்து, போதையில் மயங்கிய பிறகு வெங்கட்ராமனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து குமார், சிங்காரம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது :-

உடையாமுத்தூர் அண்ணாநகர் கல்குவாரியில் தலையில் கல்லை போட்டு முகம் சிதைந்த நிலையில் இருந்த உடலை வைத்து அவர் யார்? என்பதை கண்டுபிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலில் இருந்து ஒரு பஸ் டிக்கெட் கிடைத்தது. அதை வைத்து விசாரணை நடத்தி இறந்தவர் யார் என்பதை கண்டுபிடித்தோம்.

பின்னர் 9-ந் தேதி அந்த பகுதியில் இருந்த செல்போன் டவரில் 3 பேருடைய எண் அதிக நேரம் இருந்ததை வைத்தும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிந்தது. விசாரணையில் கொலையான வெங்கட்ராமனின் தந்தை முருகன் கண் தெரியாதவர், அவருடைய தாய் காளியம்மாள் ஆகிய 2 பேரையும் வெங்கட்ராமன் தினமும் குடித்து விட்டு வந்து அடித்து தகராறு செய்து, 1½ ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்கும்படி கூறியுள்ளார். வெங்கட்ராமனுக்கு சொத்தை கொடுத்தால் குடித்தே அழித்து விடுவார் என ஆத்திரம் அடைந்த அவரது தம்பி குமார், அவருடைய மாமா சிங்காரம் ஆகிய 2 பேரும் சேர்ந்து வெங்கட்ராமனை கொலை செய்வதென முடிவு செய்து, சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இதனை அவர்கள் வாக்குமூலமாக தெரிவித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். 

Next Story