குடியுரிமை பெறும் இந்துக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள்? - மத்திய அரசுக்கு, உத்தவ் தாக்கரே கேள்வி
இந்திய குடியுரிமை பெறும் இந்துக்கள் நாட்டில் எங்கு குடியமர்த்தப்படுவார்கள் என மத்திய அரசுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.
மும்பை,
மராட்டிய சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாக்பூரில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று கவர்னரின் உரை மீதான உறுப்பினர்கள் விவாதத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதில் அளித்து பேசினார். அப்போது குடியுரிமை பிரச்சினையில் மத்திய அரசுக்கு அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “குடியுரிமை சட்ட திருத்தத்தின் மூலம் குடியுரிமை பெறும் புலம்பெயர்ந்த இந்துக்கள் எங்கு குடியமர்த்தப்படுவார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். அதற்கான திட்டம் உங்களிடம் (மத்திய அரசு) இருக்கும் என நான் நினைக்கவில்லை” என்றார்.
பசுமாட்டின் பயன்பாடு குறித்து வீர சாவர்க்கர் கூறிய விஷயத்தில் பா.ஜனதா தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.
“பசு பயனுள்ள விலங்கு. ஆனால் அது பயனளிக்க உதவாதபோது அதை வெட்டி உணவாக பயன்படுத்தலாம்” என வீரசாவர்க்கர் கூறியிருந்ததை நினைவுக்கூரும் வகையில் உத்தவ் தாக்கரே இவ்வாறு பா.ஜனதாவுக்கு கேள்வி எழுப்பினார்.
மேலும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
மும்பை மகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த பெல்காவ் தற்போது மொழிவாரி அடிப்படையில் கர்நாடகத்திடம் உள்ளது. இது தொடர்பான சட்ட பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்து கொண்டு மராட்டியத்தை புறக்கணித்து விட்டது.
மராட்டியத்தில் பெரியளவில் முதலீடுகளை ஈர்க்க ‘மேக்னடிக் மகாராஷ்டிரா' போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஆட்சியில் நடத்தப்பட்டன. ஆனால் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி பலன்தரவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story