வார்டு மாறி வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு: குளப்பம்பட்டி கிராமத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை
பல்லவராயன் பத்தை ஊராட்சியில் வார்டு மாறி வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறி குளப்பம்பட்டி கிராமத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கறம்பக்குடி,
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பல்லவராயன் பத்தை ஊராட்சியில் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன. இதில் 6-வது வார்டில் மட்டும் சுமார் 600 வாக்காளர்கள் உள்ளனர். 6-வது வார்டில் குடியிருந்து வரும் 20-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் 7-வது வார்டு பட்டியலில் சேர்ந்து இருப்பதாகவும், 6-வது வார்டில் சம்பந்தமே இல்லாத பலர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பலமுறை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போதும் இதேபோல வாக்காளர்கள் பட்டியல் இருப்பதாகவும், வார்டு மாறி உள்ள தங்களின் பெயர்களை 6-வது வார்டு பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக்கூறி குளப்பம்பட்டி கிராமத்தினர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் நடத்தும் அலுவலர் நலதேவன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story