வடமதுரை பகுதியில் தீவிர பயிற்சி: சீறிப்பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்


வடமதுரை பகுதியில் தீவிர பயிற்சி: சீறிப்பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்
x
தினத்தந்தி 20 Dec 2019 10:30 PM GMT (Updated: 20 Dec 2019 6:03 PM GMT)

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் உற்சாகமாக நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

வடமதுரை, 

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதேபோன்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தமட்டில் பில்லமநாயக்கன்பட்டி, புகையிலைப்பட்டி, கொசவபட்டி, மாரம்பாடி, நத்தம் கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பு பெற்றவை. இதையடுத்து அந்த ஊர்களில் தற்போதே ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. காளையின் உரிமையாளர்கள், தங்களது காளைகளுக்கு பயிற்சியளிக்க தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண்மேட்டினை கொம்புகளால் குத்தும் பயிற்சி, ஓடுதல் பயிற்சி உள்ளிட்டவற்றை அளித்து வருகின்றனர். மேலும் பயிற்சிக்கு ஏற்ற ஆகாரங்களையும் காளைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர். இதேபோல் மாடுபிடி வீரர்களும் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்திவரும் வடமதுரை செங்குளத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி சோனைமுத்து கூறியதாவது:-

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதனால் நாங்களும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி, அவற்றிற்கு வழங்கப்படும் உணவில் தொடங்கி அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். வாடிவாசலில் இருந்து வெளியேறும் போது காளை எடுக்கும் வேகம் தான் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓட உதவும். இதற்கு காளைகளுக்கு நல்ல மூச்சு பயிற்சி அவசியம். எனவே காளைகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை நீச்சல் பயிற்சி அளிக்கிறோம். அத்துடன் தினமும் நடைபயிற்சியும் அளித்து வருகிறோம். மேலும் கூட்டமாக நிற்கும் மாடுபிடி வீரர்களை கண்டு காளைகள் மிரளாமல் இருக்க வாடிவாசல் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, கும்பலாக ஆட்களை நிறுத்தி, காளைகள் தாவி ஓடுவதற்கு பயிற்சிகள் அளிக்கிறோம். காளையின் திமிலை பிடித்து அடக்கவரும் வீரர்களிடம் இருந்து உடலை லாவகமாக திருப்பி தப்பிக்க மண்ணை குத்தும் பயிற்சியும் அளித்து வருகிறோம். மேலும் காளைகளுக்கு அளிக்கப்படும் உணவுகள் முக்கியமானவை. பச்சரிசி, தேங்காய், பேரிச்சம்பழ கலவையும், உளுந்து மற்றும் பருத்தியை அரைத்தும் உணவாக வழங்கி வருகிறோம். இது காளைகளின் உடல் திடமாகவும், கால்கள் உறுதியாகவும் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காயமடையும் மாடுபிடி வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை மையம் உள்ளது. அதேபோல் போட்டியில் காயமடையும் காளைகளுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு காளைகளின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story