தண்டராம்பட்டு அருகே, சொத்து தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது


தண்டராம்பட்டு அருகே, சொத்து தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2019 3:30 AM IST (Updated: 21 Dec 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அருகே சொத்து தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்முடியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, விவசாயி. இவரது மகன் அமர்நாத் (வயது 26). தண்டராம்பட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றவர் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெற்றோருக்கு சாப்பாடு எடுத்து சென்றுள்ளார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த ஏழுமலை (43), அவரது மனைவி சக்தி (38), தேவராஜ் (32), இவரது தாய் அஞ்சலை (50), அஞ்சலையின் அக்கா அயிலி (55) மற்றும் உறவினர் சந்தோ‌‌ஷ் (23) ஆகிய 6 பேரும் அரிவாள் கத்தியுடன் அமர்நாத்தை வழிமறித்து வெட்டினர். இதில் உயிருக்கு பயந்து ஓடிய அமர்நாத்தை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அமர்நாத்தை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அமர்நாத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்த அமர்நாத் குடும்பத்துக்கும், ஏழுமலையின் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்து உள்ளது. இது தொடர்பாக வழக்கும் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த சொத்து தகராறு காரணமாகத்தான் அமர்நாத்தை வெட்டிக்கொலை செய்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த கொலை சம்பவம் குறித்து தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து ஏழுமலை உள்பட 6 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த அமர்நாத் திருமணமாகாதவர். எம்.ஏ. பட்டதாரியான இவர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story