திருப்புவனம் அருகே, வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை


திருப்புவனம் அருகே, வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2019 3:45 AM IST (Updated: 21 Dec 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே உள்ள வைகை ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம் கிராமம். இந்த கிராமத்தின் வழியாக வைகை ஆறு செல்கிறது. கடந்த காலங்களில் பருவமழை பொய்த்ததால் வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையிலும் வைகை ஆற்றில் மணல் திருட்டு அதிகளவில் இருந்து வந்தது. சாக்குகளில் மணல் அள்ளிக்கொண்டு சிலர் தலைச்சுமையாகவும், சிலர் வேனில் ஏற்றியும் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஆற்றின் நடுவே பெரும் பள்ளம் ஏற்பட்டது.

மேலும் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் பருவ மழையும் தொடர்ச்சியாக பெய்ததால் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த மாதம் குடிநீருக்காகவும், விவசாயத்திற்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் அதிகம் வந்ததால் ஆற்றில் மணல் அடித்து வரப்பட்டு பள்ளங்களை மூடியது. இப்பகுதியில் வைகை ஆற்றின் இருபுறமும் கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

இதில் கணக்கன்குடி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உள்ளது. தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால் இந்த கால்வாய் அருகே இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுகிறது. ஒரு சிலர் மினி வேனை கொண்டு வந்து சாக்கு பைகளில் மணலை கடத்துகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, இப்பகுதியில் கால்வாய் கரையிலும், வைகை ஆற்றிலும் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் அவ்வப்போது மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தாலும் மணல் திருட்டு சம்பவம் குறையவில்லை. இவ்வாறு தொடர்ந்து மணல் திருட்டு நடைபெற்றால் விவசாயம் செய்ய முடியாமல் குடிநீருக்கு மிகவும் சிரமப்பட வேண்டும். எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story