மங்களூரு விமான நிலையத்தில் சித்தராமையாவின் விமானம் தரை இறங்க அனுமதி மறுப்பு
மங்களூரு விமான நிலையத்தில் சித்தராமையாவின் விமானம் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது. ‘அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுகிறது’ என அவர் குற்றச்சாட்டினார்.
பெங்களூரு,
மங்களூருவில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று மங்களூரு செல்ல முடிவு செய்தார். பகல் 2 மணியளவில் தனி விமானம் மூலம் மங்களூருவுக்கு செல்ல அவர் தயாரானார். ஆனால் அந்த தனி விமானம் மங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து சித்தராமையா தனது மங்களூரு பயணத்தை ரத்து செய்தார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், “எனது உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல், டாக்டர்களின் ஆலோசனையை மீறி நான் மங்களூரு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் போலீசார் தனி விமானம் மங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி மறுத்துள்ளனர். கர்நாடக பா.ஜனதா அரசு எதை மறைக்க முயற்சி செய்கிறது?“ என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது இன்னொரு பதிவில், “பா.ஜனதா அரசு மங்களூருவை காஷ்மீரை போல் மாற்ற முயற்சி செய்கிறது. அங்கு நிலவும் நிலைமையை ஆய்வு செய்ய எங்கள் கட்சியின் தலைவர்கள் விமானத்தில் மங்களூரு சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இது கர்நாடகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளதை காட்டுகிறது“ என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story