கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோதமாக தங்கிய வெளிநாட்டினர் 270 பேர் கைது


கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோதமாக தங்கிய வெளிநாட்டினர் 270 பேர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2019 4:00 AM IST (Updated: 21 Dec 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 270 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கர்நாடக ஐகோர்ட்டில், அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டினர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கர்நாடக ஐகோர்ட்டில் வக்கீல் விஜயகுமார் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஒகா, நீதிபதி பிரதீப்சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள் முன்பு நடைபெற்றது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கிருஷ்ணா, வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 270 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுதொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

றிப்பாக பெங்களூருவில் மட்டும் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 178 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதுதொடர்பாக 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்களை நாடு கடத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதுகுறித்து மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும் அரசு வக்கீல் கிருஷ்ணா தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story