பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு


பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 Dec 2019 4:45 AM IST (Updated: 21 Dec 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் எதிரொலியாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

பெங்களூரு, 

மத்திய பா.ஜனதா அரசு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் முன்எச்சரிக்கையாக இன்று (சனிக்கிழமை) வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் தடை உத்தரவையும் மீறி பெங்களூரு, மங்களூரு உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. மங்களூருவில் நடந்த வன்முறையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்றும் போராட்டம் நடைபெறலாம் என்ற தகவல் வெளியானதால் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் முன் எச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. 144 தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு யாரையும் அனுமதிக்க கூடாது என்று அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கமல்பந்த் உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து, ஒவ்வொரு மாவட்ட தலைநகர் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் சேருவதற்கும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. குறிப்பாக பெங்களூருவில் நேற்றும் சில அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் 53 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார், 30 பிளட்டூன் நகர ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பெங்களூருவில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்ற டவுன்ஹால், மைசூரு வங்கி சர்க்கிளில் நேற்று அதிகாலையில் இருந்தே போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். டவுன்ஹால், அதை சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் துணை போலீஸ் கமிஷனர் சேத்தன்சிங் ராத்தோடு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மற்ற பகுதிகளில் இருந்து டவுன்ஹாலுக்கு வருவதற்கு பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை உள்பட ஆயிரக்கணக்கான போலீசார் டவுன்ஹால், அதை சுற்றியுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல, மைசூரு வங்கி சர்க்கிள், நகரின் முக்கிய பகுதிகளிலும் கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

சிவாஜிநகர், பிரேசர்டவுன், சாம்ராஜ் பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். நகரின் சில போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அணிவகுப்பும் நடத்தினார்கள்.


Next Story