மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ; சித்தராமையா வலியுறுத்தல்
மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சிறுபான்மையினர் உள்பட அனைத்துதரப்பு மக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதே போல் மங்களூருவில் சிறுபான்மையினர் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அப்பாவிகள் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ஜனநாயகத்தில் மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டம் நடத்தவும் உரிமை உள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் இது கேள்விக்குறியாக மாறியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றும்போது பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இது ஒரு சர்ச்சைக்குரிய சட்ட மசோதா, இதை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று கூறினார். மக்களின் கருத்துரிமை, போராடும் உரிமையை ஒடுக்க மத்திய-மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை.
கர்நாடகத்தில் போராட்டங்களை ஒடுக்கும் நோக்கத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை அமல்படுத்துவதற்கான தேவை எழவில்லை. கர்நாடகத்தில் அத்தகைய மோசமான சூழல் நிலவவில்லை. இந்த தடை உத்தரவு ஜனநாயகம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
பெங்களூருவிலும் அதிகமான எண்ணிக்கையில் மக்கள் கூடி போராட்டம் நடத்தினர். இங்கு துப்பாக்கி சூடு நடைபெறவில்லை. மங்களூருவில் மட்டும் துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்?. காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்குள் நுழைந்து போலீசார் தாக்கியுள்ளனர். போராட்டங்கள் கைமீறி போகும்போது கடைசி ஆயுதமாக தான் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியை பயன்படுத்தி போலீசார் சுட்டுள்ளனர்.
அரசியல் சாசன பதவியில் இருக்கும் மத்திய மந்திரி சுரேஷ் அங்கடி, போராட்டக்காரர்களை கண்டதும் சுடும்படி கூறியுள்ளார். தனது இந்த கருத்தில் உறுதியாக உள்ளதாக அவர் விளக்கம் அளிக்கிறார். வன்முறையில் ஈடுபடுவது, அவற்றை தூண்டிவிடுவது என்பது பா.ஜனதாவின் கலாசாரம். கோத்ரா, பாபர் மசூதி இடிப்பு போன்ற சம்பவங்களை செய்தது யார்?.
காங்கிரஸ் கட்சி சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து போராடி, உயிர் தியாகங்களை செய்தது. பா.ஜனதா என்ன செய்தது?. கர்நாடகத்தில் ஒரு அச்சமான சூழல் நிலவுகிறது. மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க பா.ஜனதா அரசுகள் சதி செய்கின்றன. மாற்று கருத்து உடையவர்களை அரசுகள் அழைத்து பேசி அவற்றுக்கு தீர்வு காண வேண்டும். மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
இது ஜனநாயக நாடா? அல்லது பாசிச குணம் கொண்ட நாடா?. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, துப்பாக்கி சூடு சம்பவம் நடக்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டும் விவசாயிகள் மீது லேசான தடியடி நடந்தது. எவ்வளவு பெரிய போராட்டங்கள் நடைபெற்றாலும், அதை வெற்றிகரமாக சமாளித்து சரிசெய்தோம். முன்பு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 2 விவசாயிகள் செத்தனர். அதே போன்ற சம்பவம் இப்போது எடியூரப்பா ஆட்சியில் நடந்துள்ளது.
மங்களூருவில் நடந்தது, மாநில அரசு திட்டமிட்டு நடத்திய தாக்குதல் ஆகும். மதங்களிடையே மோதலை உருவாக்க அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட மத்திய-மாநில அரசுகள் முயற்சி செய்கிறது. மங்களூரு சம்பவத்திற்கு மாநில அரசே பொறுப்பு. இந்த சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசின் நடவடிக்கையின் பின்னணியில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் உள்ளனர். பத்திரிகையாளர்களையும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை மாநில அரசு கைவிட வேண்டும். நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்டது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் குடியுரிமை சட்டத்தை மத்திய பா.ஜனதா அரசு கையில் எடுத்துள்ளது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story