ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த ரூ.52 லட்சத்துடன் மாயமான டிரைவர் கைது


ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த ரூ.52 லட்சத்துடன் மாயமான டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2019 4:30 AM IST (Updated: 21 Dec 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு வந்த ரூ.52 லட்சத்துடன் மாயமான டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவர் தனது மாமனார் வீட்டில் பதுங்கி இருந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார்.

கோட்டூர்,

சென்னை வேளச்சேரி விஜயநகர் 1-வது பிரதான சாலையில் விஜயா வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. சம்பவத்தன்று இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவதற்காக வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பும் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் வினோத்(வயது 28), பணம் நிரப்பும் ஊழியர் மற்றொரு வினோத்(26) ஆகியோர் ஒரு காரில் சென்றனர்.

இவர்களுடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியர் முகமது(27) என்பவரும் இருந்தார். அப்போது காரில் இருந்த ரூ.52 லட்சத்துடன் டிரைவர் அம்புரோஸ்(40) மாயமாகி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பணத்துடன் மாயமான கார் டிரைவர் அம்புரோசை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர்.

ரூ.20 லட்சம் மீட்பு

இந்த நிலையில் ஆர்.கே.நகர் மணலி சாலையில் ஏ.டி.எம். பணத்தை கொண்டு வந்த கார் மட்டும் கேட்பாரற்று நிற்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்த விசாரணையில் டிரைவர் அம்புரோசின் மனைவி பிரதீமா, வியாசர்பாடியில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், பிரதீமாவிடம் விசாரித்தனர்.

இதில் அம்புரோஸ் திருடிச்சென்ற ரூ.52 லட்சத்தில் ரூ.20 லட்சத்தை மட்டும் அவரது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்து இருப்பது தெரிந்தது. அந்த பணத்தை போலீசார் மீட்டனர்.

தப்பிச்சென்ற அம்புரோஸ், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் போலீஸ் சரகம் தெற்கு மண்ணுக்குமுண்டான் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி இருப்பதாக பிரதீமா போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

கைது-பரபரப்பு

தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பெருகவாழ்ந்தன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் தெற்கு மண்ணுக்குமுண்டான் கிராமத்துக்கு சென்று அங்கு தனது மாமனார் வீட்டில் பதுங்கி இருந்த அம்புரோசை கைது செய்து தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் அம்புரோசை தனிப்படை போலீசார் சென்னை வேளச்சேரிக்கு அழைத்து சென்றனர். ஏ.டி.எம். பணத்துடன் மாயமான டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story