9 பேரை தஞ்சாவூருக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: திருச்சி காப்பக பெண்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்


9 பேரை தஞ்சாவூருக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: திருச்சி காப்பக பெண்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
x
தினத்தந்தி 22 Dec 2019 4:30 AM IST (Updated: 22 Dec 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காப்பகத்தில் இருந்து 9 பேரை தஞ்சாவூருக்கு இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி சுப்ரமணியபுரம் ரெங்கநகரில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த தனியார் காப்பகம் மீதான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இந்த காப்பகம் உள்ளது. இதில் தங்கி உள்ள சிறுமிகள், மாணவிகள், இளம்பெண்களை சமூக நலத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் காப்பகத்தில் இருந்து 9 இளம்பெண்கள் கடந்த மாதம் சென்னைக்கு விமானத்தில் சென்று வந்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் அவர்களிடம் விளக்கம் கேட்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பொருட்கள் வாங்க சென்னை சென்று வந்ததாக அவர்கள் கூறிய பதில்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 9 பேரை தஞ்சாவூரில் உள்ள அரசு காப்பகத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

வாக்குவாதம்

இதற்கிடையில் கடந்த மாதம் 28-ந் தேதி காப்பகத்தில் இருந்து அந்த 9 இளம்பெண்களையும் தஞ்சாவூருக்கு மாற்ற அதிகாரிகள் முயன்றனர். ஆனால் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் செல்ல மறுத்தனர். இந்த நிலையில் 9 இளம்பெண்களையும் தஞ்சாவூர் காப்பகத்திற்கு மாற்ற கலெக்டர் உத்தரவுபடி மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தமிமுனிசா நடவடிக்ைக எடுத்தார். இதற்காக அவரது தலைமையில் அதிகாரிகள் நேற்று சுப்ரமணியபுரத்தில் உள்ள காப்பகத்திற்கு வந்தனர். அங்கு முன்கூட்டியே பாதுகாப்பு கருதி ஏராளமான பெண் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

சமூக நலத்துறை அதிகாரி தமிமுனிசா, காப்பக மாணவி கள்-இளம்பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 9 இளம்பெண்களையும் இடமாற்றம் செய்வதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரி தமிமுனிசா மற்றும் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட 9 பேரும் தஞ்சாவூர் செல்ல மறுத்தனர்.

ஆலோசனை

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த பொன்மலை சரக போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன், கே.கே.நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு ஆகியோரிடம் சமூக நலத்துறை அதிகாரி ஆலோசனை நடத்தினார். காப்பக மாணவிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இடமாற்ற முடிவை தற்போதைக்கு கைவிட போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.இதையடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையில் 9 இளம்பெண்களையும் இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து காப்பக தரப்பை சேர்ந்தவர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த தரப்பினரும் காப்பகத்திற்கு வெளியே நேற்று நின்று அங்கு நடப்பதை பார்த்து கொண்டிருந்தனர். போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story