மாநகராட்சி சார்பில் கட்டிடங்களை இடிக்க வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு


மாநகராட்சி சார்பில் கட்டிடங்களை இடிக்க வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 22 Dec 2019 4:30 AM IST (Updated: 22 Dec 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வியாபாரிகளுக்கு கட்டிடங்களை இடிக்க வழங்கிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் மனுவை போட்டனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் டேவிட்சன் தலைமையில் நிர்வாகிகள் நாராயணராஜா, ஜேம்ஸ் மார்ஷல், கருங்கல் ஜார்ஜ், ராஜதுரை, கத்பட், அம்பலவாணன், கதிரேசன், நெல்லையப்பன், சம்சுதீன், கென்னடி உள்ளிட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். உள்ளாட்சி தேர்தல் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு பெறுவதில்லை என்பதால், அந்த மனுவை அங்குள்ள பெட்டியில் போட்டனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் மாநகர பகுதியானது மிகவும் நெருக்கமானதும், அதிக மக்கள் வாழும் பகுதியாகும். இங்கு உள்ள சாலைகளும் குறுகியது. இட பற்றாக்குறை காரணமாக சிறிய இடங்களை பல பாகங்களாக பிரித்து கடை மற்றும் வீடுகள் கட்டி பல ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நோட்டீஸ்

நாகர்கோவில் மாநகராட்சியின் பரிந்துரையின்படியும் உள்ளூர் திட்டக் குழுமத்தின் பரிந்துரையின்படியும் தொடர் கட்டிடங்கள் இருக்கும் பகுதி, குறுகிய சாலைகள் உள்ள பகுதி, மக்கள் அதிகமாக, நெருக்கமாக வாழும் பகுதி என நாகர்கோவில் மாநகரத்துக்கான முழுமைத் திட்டம் மற்றும் வரைபடத்தில் அரசின் விதிமுறைகளை மாநகர பகுதியில் தளர்த்தி அனுமதி வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் கடைகளுக்கும், கட்டிடங்களுக்கும் நோட்டீஸ் வழங்கி இடிக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

மாநகராட்சி பகுதியில் கோட்டார், கே.பி.ரோடு, எம்.எஸ்.ரோடு ஆகியவை மட்டுமே உள்ளூர் திட்டக்குழும வரைமுறைக்கு உகந்த பகுதியாகும். மற்ற சாலைகள் அனைத்தும் உள்ளூர் திட்டக்குழும விதிகளை செயல்படுத்த பொருந்தாதவைகளாக உள்ளது.

ரத்து செய்ய வேண்டும்

மாநகர பகுதியின் சூழ்நிலைகளை கருதியும், மக்களுக்கு குடியுரிமை வழங்கிடும் விதமாக மாநகராட்சி பகுதியில் உள்ளூர் திட்டக்குழும விதிமுறைகளை தளர்த்திட அரசுக்கு மீண்டும் வலியுறுத்த வேண்டும். தற்போது மாநகராட்சியால் நோட்டீஸ் வழங்கப்பட்ட வியாபாரிகளின் கடைகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியதில்லை. பட்டா நிலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் உள்ளது. இதில் வியாபாரிகள் பலரது கடைகளும் அடங்கும். ஆகவே வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியபடி மேல் நடவடிக்கை எடுக்காமல் ரத்து செய்திட கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story