நெல்லையில் 25 ஆயிரம் கிலோ சீனி மூட்டைகளுடன் கிணற்றுக்குள் விழுந்த லாரி


நெல்லையில் 25 ஆயிரம் கிலோ சீனி மூட்டைகளுடன் கிணற்றுக்குள் விழுந்த லாரி
x
தினத்தந்தி 22 Dec 2019 4:15 AM IST (Updated: 22 Dec 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் 25 ஆயிரம் கிலோ சீனி மூட்டைகளுடன் லாரி கிணற்றுக்குள் விழுந்து மூழ்கியது. அதிர்‌‌ஷ்டவசமாக டிரைவர்கள் உயிர் தப்பினர்.

நெல்லை, 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் சீனிஆலையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத்துறை கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக 12 சக்கரங்கள் கொண்ட ஒரு லாரியில் 25 ஆயிரம் கிலோ சீனி மூட்டைகள் ஏற்றப்பட்டன. இவை தலா 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளாக இருந்தன.

அந்த லாரி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. லாரியை திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சித்தரேவு கிராமத்தை சேர்ந்த டிரைவர் பாலகிரு‌‌ஷ்ணன் (வயது 31), மாற்று டிரைவர் முருகவேல் (30) ஆகியோர் ஓட்டி வந்தனர்.

இந்த லாரி அதிகாலை 3.30 மணிக்கு நெல்லை அருகே தாழையூத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான அரிசி ஆலைக்கு வந்தது. அங்குள்ள குடோனில் சீனி மூட்டைகளை இறக்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அரிசி ஆலைக்கு சற்று முன்னதாக ரோட்டின் ஓரத்தில் லாரி நிறுத்தப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு பிறகே மூட்டைகளை இறக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டதால் டிரைவர்கள் காத்திருந்தனர்.

காலை 8.30 மணி அளவில் லாரியின் பின்பக்க டயர்கள் மெதுவாக மண்ணுக்குள் இறங்கின. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பெய்த மழையால் மண்ணுக்குள் இறங்கியது. ஆனால் அதன் அருகில் மிகப்பெரிய விபரீதம் இருந்தது யாருக்கும் தெரியாமல் போனது. லாரி நிறுத்தப்பட்ட இடத்தின் அருகில் 60 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றுக்குள் குப்பைகள், மண் கொட்டப்பட்டு செடிகள் வளர்ந்திருந்ததால், அங்கு கிணறு இருந்ததே தெரியவில்லை.

இதையடுத்து டிரைவர்கள் கிரேன் மூலம் லாரியை இழுத்து மீட்க முயற்சி செய்தனர். இதற்காக ஒரு கிரேன் கொண்டு வரப்பட்டு லாரியில் கட்டி இழுத்தனர். ஆனால் பலன் கொடுக்கவில்லை. இதையடுத்து அந்த லாரியில் இருந்த சீனி மூட்டைகளை மற்றொரு லாரியில் ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்தனர். இந்த நிலையில் காலை 10 மணி அளவில் எதிர்பாராதவிதமாக லாரி நிறுத்தி இருந்த இடத்தில் மண் சரிந்தது. அத்துடன் சீனி மூட்டைகளுடன் லாரியும் சரிந்து அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்தது. ஒரு சில நொடிகளில் லாரி முற்றிலும் கிணற்றுக்குள் மூழ்கி சம்பவம் நடந்த தடயமே இல்லாத நிலை காணப்பட்டது.

அதிர்‌‌ஷ்டவசமாக டிரைவர்கள் 2 பேரும் மற்றொரு லாரியை எடுத்து வர சென்றதால் உயிர் தப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பெரிய கிரேன்கள் மூலம் கிணற்றுக்குள் கிடந்த லாரியை வெளியே எடுப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இதற்காக தலா 14 டன் திறன் கொண்ட 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. மின்வாரிய ஊழியர்கள் மீட்பு பணிக்கு உதவியாக அங்கிருந்த மின்கம்பிகளை அகற்றி கொடுத்தனர்.

மதியம் 12 மணி அளவில் அந்த 2 கிரேன்கள் மூலம் லாரியை தூக்க முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. இதையடுத்து 50 டன் திறன் கொண்ட ராட்சத கிரேன்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே கிணற்றில் உள்ள தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.

இதையொட்டி அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மதுரை பகுதியில் இருந்து தாழையூத்து வழியாக வந்த கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், தாழையூத்து ரெயில்வே கேட், மணிமூர்த்தீசுவரம் வழியாக தச்சநல்லூர் வடக்கு புறவழிச்சாலைக்கு திருப்பி விடப்பட்டன. நெல்லையில் இருந்து மதுரை நோக்கி சென்ற வாகனங்கள் வழக்கம் போல் சென்றன.

Next Story