ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு


ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
x
தினத்தந்தி 21 Dec 2019 10:15 PM GMT (Updated: 21 Dec 2019 9:09 PM GMT)

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7 நாட்கள் டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கல் பரிசீலனை முடித்து இறுதிவேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்தும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 27 மற்றும் 30 ஆகிய 2 நாட்களில் நடக்கிறது. இதை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி முதல் 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரையிலும், மேலும் 28-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் 30-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணி வரையிலும் சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்.

கடும் நடவடிக்கை

மேலும் வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, 2-ந் தேதி முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. எனவே, இந்த நாட்களில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரையிலான (எப்.எல்.6 தவிர) உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 7 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால், அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப் படுகிறது. இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.


Next Story