திருப்பூர் மாவட்டத்தில் 250 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு - கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் 250 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு - கலெக்டர் விஜயகார்த்திகேயன் தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2019 4:23 AM IST (Updated: 22 Dec 2019 6:07 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் 250 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலின்படி 4 லட்சத்து 91 ஆயிரத்து 651 ஆண்கள், 5 லட்சத்து 4 ஆயிரத்து 50 பெண்கள், 64 மூன்றாம் பாலினத்தவர் என 9 லட்சத்து 95 ஆயிரத்து 765 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நாளை(திங்கட்கிழமை) வாக்காளர் துணைப்பட்டியல் வெளியிடப்படும். அந்த பட்டியலில் உள்ளவர்களும் வாக்களிக்க முடியும்.

மாவட்டத்தில் 1,704 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு 784 வாக்குச்சாவடிகளும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு 920 வாக்குச்சாவடிகளிலும் நடக்கிறது. மாவட்டத்தில் 156 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 94 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

30 வாக்குச்சாவடிகளை இணையதள கண்காணிப்பு மூலமும், 100 வாக்குச்சாவடிகள் வீடியோகிராபர் மூலமாகவும், 120 வாக்குச்சாவடிகள் நுண் தேர்தல் மேற்பார்வையாளர்கள் மூலமாகவும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 1 பறக்கும்படை வீதம் 7 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரம் செயல்படும் வகையில் 21 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கண்காணிப்பு அதிகாரி, 1 போலீஸ் அதிகாரி, 3 காவலர்கள், ஒரு வீடியோகிராபர் இடம்பெறுவார்கள். ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் புகார் தெரிவிக்க 1800 425 7023 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். அனைத்து வாக்காளர்களுக்கும் நாளைக்குள்(திங்கட்கிழமை) வாக்குச்சாவடி சீட்டுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் உரிய நேரத்தில் வழங்கும் வகையில் தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் தலைமையிலான குழு பணியாற்றி வருகிறது.

தாராபுரம் ஒன்றியத்தில் பொன்னாபுரம் கிராம ஊராட்சி வார்டு எண்.1 ல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆண் வேட்பாளர் மனு செய்ததால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்த வார்டில் தேர்தல் இல்லை. இதுபோல் மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் கருப்பன் வலசு கிராம ஊராட்சி வார்டுஎண்.3-ல் வேட்புமனு தாக்கல் செய்த 2 பெண்களும் மனுவை வாபஸ் பெற்றதால் அந்த வார்டுக்கும் தேர்தல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், துணை கலெக்டர்(பயிற்சி) விஷ்ணுவர்த்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) சந்திரகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி கந்தசாமி, தேர்தல் தாசில்தார் முருகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story