பா.ஜனதாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை; சித்தராமையா கருத்து


பா.ஜனதாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை; சித்தராமையா கருத்து
x
தினத்தந்தி 22 Dec 2019 12:16 AM GMT (Updated: 22 Dec 2019 12:16 AM GMT)

துப்பாக்கி குண்டுகள் மூலம் அப்பாவிகளை கொன்ற பா.ஜனதாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

மங்களூருவில் போராட்டக்காரர்களை கொல்லும் நோக்கத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மாநில அரசு உத்தரவிடாமல் துப்பாக்கி சூடு நடத்த போலீசார் முடிவு எடுக்க முடியுமா? என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு போலீஸ் மந்திரி, தடியடி, துப்பாக்கி சூடு நடத்துவது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப போலீசாரே முடிவு எடுத்து கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

அப்படி என்றால் போலீஸ் மந்திரிக்கு என்ன வேலை?. இன்னும் அவர் அந்த பதவியில் ஏன் நீடிக்கிறார். முடிவு எடுக்கும் அதிகாரத்தை போலீசாருக்கு கொடுத்துவிட்டு போலீஸ் மந்திரி ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு செல்ல வேண்டியது தானே. நீதி விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மனித உயிரும் மிக முக்கியமானது.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். காங்கிரஸ் தீவிரமாக போராடும். மத்திய மந்திரி ஒருவர், துப்பாக்கிகள் இருப்பது, பூஜை செய்வதற்கு அல்ல என்று சொல்கிறார். இத்தகைய கருத்துகள் வன்முறையை தூண்டிவிடுவது போல் இல்லையா?.

துப்பாக்கி இருக்கிறது என்பதற்காக தினமும் ஒருவரை கொல்கிறீர்களா?. இத்தகையவரை மந்திரியாக பா.ஜனதா நியமித்து இருப்பது வெட்கக்கேடானது. பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக, அரசின் அநீதியை வெளிப்படுத்த அனுமதி இல்லை என்றால் எதிர்க்கட்சி எதற்கு இருக்க வேண்டும்?. துப்பாக்கி குண்டுகள் மூலம் அப்பாவிகளை கொன்ற பா.ஜனதாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.

Next Story