‘ஏர் ஹாரன்’ பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமல மாவட்டத்தில் ‘ஏர் ஹாரன்’ பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் தற்போது வளர்ந்து வரும் நகரங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். திருவண்ணாமலை பகுதியில் மோட்டார் சைக்கிள் முதல் தனியார் பஸ் மற்றும் லாரிகள் ‘ஏர் ஹாரன்’ பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
வாகனங்களில் பொதுவாக 91 டெசிபல் அளவை கொண்ட ஹாரன்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் திருவண்ணாமலை பகுதியில் உள்ள சில தனியார் பஸ்கள், லாரிகளில் 150 டெசிபல் முதல் 180 டெசிபல் வரை உள்ள ‘ஏர் ஹாரன்’களை பயன்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் இருந்து வரும் ஒலியால் காதுகளில் உள்ள செவிப்பறை பாதிக்கப்படும். பொதுமக்கள் சாலைகளில் நடந்து சென்று கொண்டு இருக்கும் போது திடீரென பின்னால் வரும் சில வாகனங்களில் இருந்து ஏர் ஹாரனை ஒலிப்பதால் அவர்களது கவனம் சிதறி விபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
அதேபோல் தற்போது மோட்டார் சைக்கிள்களிலும் இதுபோன்ற அதிக ஒலி எழுப்பக்கூடிய ‘ஏர் ஹாரன்’கள் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் முறையாக வாகனங்களை ஆய்வு செய்வதாக தெரியவில்லை. மேலும் மோட்டார் வாகனத்துறை அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் நடவடிக்கை எடுப்பதும் இல்லை.
திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்று ‘ஏர் ஹாரன்’கள் பயன்படுத்தபடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, பொதுமக்களை பாதிக்கும் இதுபோன்ற அதிக ஒலி எழுப்பும் வாகனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story