கடன் தொல்லையால் ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடித்தேன் - கைதான கார் டிரைவர் வாக்குமூலம்


கடன் தொல்லையால் ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடித்தேன் - கைதான கார் டிரைவர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 23 Dec 2019 4:45 AM IST (Updated: 22 Dec 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

கடன் தொல்லையால் ஏ.டி.எம். பணத்தை கொள்ளையடித்ததாக கைதான டிரைவர், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி விஜயநகர் 1-வது பிரதான சாலையில் உள்ள விஜயா வங்கி ஏ.டி.எம். மையத்தில் கடந்த 19-ந்தேதி மாலை ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்புவதற்காக கொண்டு வந்த ரூ.52 லட்சத்துடன் டிரைவர் அம்புரோஸ் (வயது 40) தப்பிச்சென்றார்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி போலீசார், தனிப்படை அமைத்து விசாரித்தனர். வியாசர்பாடியில் உள்ள அம்புரோசின் மனைவியிடம் நடத்திய விசாரணையில் அவர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தெற்கு மண்ணுக்குமுண்டான் கிராமத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீசார், அம்புரோசை கைது சென்னை அழைத்து வந்தனர்.

வியாசர்பாடியில் உள்ள உறவினர் மற்றும் நண்பர்களிடம் கொடுத்து பதுக்கி வைத்து இருந்த ரூ.52 லட்சத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

கைதான டிரைவர் அம்புரோஸ், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் சொந்தமாக கார் வாங்கினேன். இதனால் எனக்கு கடன் தொல்லை ஏற்பட்டது. கடனை அடைக்க என்ன செய்வது? என மிகுந்த மன குழப்பத்தில் இருந்தேன். அப்போதுதான் 19-ந்தேதி வேளச்சேரி பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணத்தை போட என்னை அழைத்துச்சென்றனர்.

ஏ.டி.எம். அருகே காரை நிறுத்தி இருந்தபோது லாரி ஒன்று வந்ததால், அதற்காக காரை சற்று தள்ளி நிறுத்த சென்றேன். அப்போதுதான், கடன் தொல்லை அதிகமாக இருப்பதால் இந்த பணத்தை கொள்ளையடித்து சென்றால் கடனை அடைத்துவிடலாம் என்று நினைத்தேன்.

பின்னர் காரில் இருந்த ரூ.52 லட்சத்துடன் வியாசர்பாடிக்கு தப்பிச்சென்றேன். அங்கு எனது உறவினர் மற்றும் நண்பர்களிடம், அவசரமாக ஊருக்கு செல்வதால் அலுவலக பணத்தை வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் வந்து பெற்றுக்கொள்கிறேன் என்று கூறி ரூ.10 ஆயிரத்தை மட்டும் செலவுக்கு எடுத்துக்கொண்டு மீத பணத்தை அவர்களிடம் பிரித்து கொடுத்தேன்.

காரை ஆர்.கே.நகர் பகுதியில் விட்டு விட்டு மன்னார் குடியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து பிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அம்புரோசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story