ராசிபுரம் உழவர் சந்தை அருகே கடைகள் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு


ராசிபுரம் உழவர் சந்தை அருகே கடைகள் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Dec 2019 11:00 PM GMT (Updated: 22 Dec 2019 8:12 PM GMT)

ராசிபுரம் உழவர் சந்தை அருகே கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய திடீர் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம்,

ராசிபுரம் உழவர் சந்தையில் 84 கடைகள் உள்ளன. இங்கு முள்ளுகுறிச்சி, கணவாய்ப்பட்டி, நாரைக்கிணறு, உரம்பு, புதுப்பட்டி, ஓசக்கரையான்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உழவர் சந்தையும், ராசிபுரம் புதிய பஸ்நிலையமும் அருகருகே அமைந்துள்ளது. பஸ்நிலைய பகுதியில் வியாபாரிகள் மற்றும் வெளியாட்கள் கடைகள் அமைத்து காய்கறிகள், பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த கடைக்காரர்களிடம் சிலர் நகராட்சி வரியும் வசூலிக்கின்றனர். உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் வரை வியாபாரிகள் கடைகள் அமைக்க அனுமதி இல்லை. பஸ்நிலைய பகுதியில் கடைகள் வைக்கப்பட்டு உள்ளதால் உழவர் சந்தையில் காய்கறிகளை கொண்டு வந்து விற்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் நேற்று அதிகாலை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பஸ்நிலைய பகுதியில் கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை நேரத்தில் நடந்த இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராசிபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ராசிபுரம் பஸ்நிலையம் அருகே விவசாயிகள் நடத்திய மறியல் போராட்டம் காரணமாக நேற்று அதிகாலை பரபரப்பாக காணப்பட்டது.

Next Story