பாரதத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் திருச்சியில் நடந்த மாநாட்டில் ராம.கோபாலன் பரபரப்பு பேச்சு


பாரதத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் திருச்சியில் நடந்த மாநாட்டில் ராம.கோபாலன் பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 23 Dec 2019 4:30 AM IST (Updated: 23 Dec 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

பாரதத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த மாநாட்டில் ராம.கோபாலன் பேசினார்.

திருச்சி,

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று இரவு இந்து முன்னணி சார்பில் இந்து விரோத முறியடிப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்து நாடு

குடியுரிமை திருத்த சட்டம் வந்து இருக்கிறது. இந்த சட்டத்தை பற்றி அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பயங்கரவாதிகளும், அவர்களது கைக்கூலிகளும் இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை தூண்டுபவர்கள் தேசியவாதிகள் இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை இந்து முன்னணி முழுமனதோடு வரவேற்கிறது.

இந்து முன்னணியின் 4 லட்சியங்கள் நிறைவேற்றப்படவேண்டும். பாரதம் இழந்த நிலப்பரப்பை மீட்டெடுக்க வேண்டும். பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகள் மீண்டும் இந்துஸ்தான் ஆக மாற்றப்பட வேண்டும். இழந்த கோவில்களை மீட்க வேண்டும். மத மாற்றம் செய்யப்பட்ட இந்துக்களை மீண்டும் தாய் மதத்திற்கு கொண்டு வரவேண்டும். பாரதத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானங்கள்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த சட்டத்தால் எந்த பாதிப்பும் கிடையாது. இந்த சட்டத்தின் மூலம் பயங்கரவாதிகளை வெளியேற்றவேண்டும். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி சன்னதிக்கு சொந்தமான நந்தவனத்தை ஆக்கிரமிப்பு செய்ய நடக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். திருச்சி பூலோக நாதர் கோவில் அதிகாரி கோவில் நிர்வாகத்தை அலட்சிய போக்குடன் நடத்துவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதசார்பின்மையை கடை பிடித்து பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்வது, புள்ளம்பாடி அருகே ஆலம்பாக்கம் கிராமத்தில் ராஜ ராஜசோழனால் கட்டப்பட்ட கைலாச நாதர் கோவில் பூட்டி கிடக்கிறது. அதனை திறந்து பூஜைகள் நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொது செயலாளர் முருகானந்தம், பொருளாளர் சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Next Story