ஜனாதிபதி இன்று வருகை: புதுவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


ஜனாதிபதி இன்று வருகை: புதுவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 4:45 AM IST (Updated: 23 Dec 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி இன்று(திங்கட்கிழமை) புதுவை வருகிறார்.இதையொட்டி 5 அடு்க்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று (திங்கட் கிழமை) புதுச்சேரி வருகிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்திற்கு வருகிறார்.

அங்கு அவருக்கு கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் ஜனாதிபதி கார் மூலம் புதுவை பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

கவர்னர் மாளிகையில் தங்குகிறார்

விழா முடிந்ததும் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு வரும் ஜனாதிபதி அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார். தொடர்ந்து சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் அரவிந்தர் ஆசிரமத்துக்கும், ஆரோவில் மாத்ரி மந்திருக்கும் செல்கிறார்.

அதன்பின்னர் புதுவைக்கு திரும்பும் அவர் கவர்னர் மாளிகையில் இன்று(திங்கட்கிழமை) இரவு தங்குகிறார். நாளை(செவ்வாய்க்கிழமை) காலை புதுவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் செல்கிறார். அங்கு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சென்று சனிபகவான் சன்னதியில் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்கிறார்.

வாகன சோதனை

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி செல்லும் வழிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுவை மாநில எல்லைகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை நடத்துகின்றனர்.. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

5 அடுக்கு பாதுகாப்பு

புதுச்சேரியில் ஜனாதிபதி தங்கும் கவர்னர் மாளிகையை சுற்றி பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள் ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அவர் செல்லும் சாலையில் அவரது கார் செல்வதற்கு 15 நிமிடத்திற்கு முன்னதாக போக்குவரத்து தடை செய்யப்படும். அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி வந்து செல்லும் இடங்கள் அனைத்தும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் 300 பேர் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரோந்து பணி

இதேபோல் கடலோர பாதுகாப்பு படையினரும் புதுவையையொட்டி கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுவையில் கவர்னர் மாளிகை அமைந்துள்ள இடத்தின் அருகே படகுகள் செல்ல 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி புதுவை வருகையை முன்னிட்டு அவர் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் இடங்களிலும், முத்தியால்பேட்டை பகுதியிலும் புதுவை அரசு சார்பில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story