குடியுரிமை சட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை - தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
குடியுரிமை சட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
நாக்பூர்,
நாடு முழுவதும் அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. மராட்டியத்திலும் இந்த போராட்டம் சூடு பிடித்துள்ளது. இதற்கிடையே நாக்பூரில் இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரதீய ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் எந்த நாட்டிற்கோ அல்லது மதத்திற்கோ எதிரானது இல்லை. ஆனால் நாட்டில் அமைதி இன்மையை ஏற்படுத்துவதற்காக சிலர் தவறான செய்திகளை பரப்புகின்றனர். தற்போது குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் வீதிகளுக்கு வந்துகொண்டு இருக்கின்றனர். இந்த சட்டத்தை எதிர்த்து நடக்கும் பல போராட்டங்கள் வன்முறையை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களால் பொது சொத்துகளுக்கு தான் சேதம் ஏற்படும்.
இந்த சட்டத்தின் படி 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியா வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story