திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 லட்சத்து 91 ஆயிரம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 லட்சத்து 91 ஆயிரம் வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:45 PM GMT (Updated: 23 Dec 2019 3:11 PM GMT)

திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டார். இதில் 19 லட்சத்து 91 ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டார்.

இந்த வாக்காளர் பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 699 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 11 ஆயிரத்து 747 பெண் வாக்காளர்களும், 90 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 19 லட்சத்து 91 ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 6-ந் தேதி வரை பெறப்பட்ட மனுக்களில் இருந்து 8 சட்டமன்ற தொகுதியில் புதிதாக 6 ஆயிரத்து 931 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். மேலும் இறந்தோர், இடம் பெயர்ந்தேர் மற்றும் இருமுறை பதிவு செய்தவர்கள் என 4 ஆயிரத்து 833 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வாக்காளர் பட்டியல் அனைத்து கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டு இருக்கும். மேலும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் அல்லது http://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் வாக்காளர் பட்டியலை காணலாம்.

வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பெயர் மற்றும் குடும்பத்தினர்களின் விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம். இன்று (அதாவது நேற்று) முதல் 1-1-2020-ந் தேதியை அடிப்படையாக கொண்டு சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் -2020 நடைபெற உள்ளது. 18 வயது நிறைவடைந்தவர்கள் படிவம்-6, வயது சான்று மற்றும் இருப்பிட ஆதாரம் சமர்பித்து வாக்காளர் பட்டியலில் புதிதாக தங்களின் பெயரை சேர்த்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, தங்கள் பெயர் மற்றும் விவரங்களில் திருத்தம் செய்ய படிவம்-8 மற்றும் ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ சமர்பித்து வாக்காளர்கள் பயன்பெறலாம். இதற்கான மனுக்கள் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி வரை பெறப்படும். மேலும் வருகிற 4,5,11,12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். பிப்ரவரி 14-ந் தேதி துணைப்பட்டியல் வெளியிடப்படும்.

சிறப்பு முகாம் நடைபெறும் 4 நாட்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக மனுக்கள் பெறப்படும். வாக்காளர்கள் அங்கு சென்று படிவங்களை பெற்று உரிய ஆதாரத்துடன் விண்ணப்பிக்கலாம்.

மற்ற வேலை நாட்களில் மனுக்களை அந்தந்த பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், வாக்குச்சாவடி அலுவலர்களிடம் அல்லது தேர்தல் ஆணைய இணையதளம் https://www.nvsp.in/. மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்காளர் பட்டியல் வெளியிட்டின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜானகி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, தாசில்தார்கள் புவனேஸ்வரி, அமுலு மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story