திருப்பத்தூரில் பருத்தி ஏல விற்பனை - கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்


திருப்பத்தூரில் பருத்தி ஏல விற்பனை - கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 4:20 PM GMT)

திருப்பத்தூரில் பருத்தி ஏல விற்பனையை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு சங்கம் சார்பில் ஆண்டு தோறும் பருத்தி ஏல விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்த பருத்தி ஏல விற்பனையில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஊத்தங்கரை, கிரு‌‌ஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்திகளை மூட்டை கட்டி கொண்டு வந்து மாடப்பள்ளி உழவர் சேவை கூட்டுறவு சங்கத்தில் வைப்பார்கள்.

பருத்தியை ரகம் பார்த்து கோவை, அவினாசி, ஈரோடு, திருப்பூர், மும்பை, ஜலகண்டாபுரம் ஆகிய பகுதியில் இருந்து வரும் வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்வார்கள். அதிக விலை கேட்கும் வியாபாரிக்கு பருத்தியை வழங்கி பணம் பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு வழங்குவார்கள்.

இந்த நிலையில் நேற்று இந்த ஆண்டுக்கான பருத்தி ஏல விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது. சங்க தலைவர் ஏ.தேவராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலந்துகொண்டு, பருத்தி ஏல விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், விவசாயிகளிடம் தங்களிடம் விளைந்த பருத்தியை பற்றி விசாரித்தார்.

இதில் கூட்டுறவு வேலூர் மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார், துணை பதிவாளர் முனிராஜ், கள ஆய்வாளர் தர்மேந்திரன், துணைத்தலைவர் சி.சாமிகண்ணு, நிர்வாக குழு உறுப்பினர்கள் கே.வாசு, வி.உதயகுமார், வ.குணசேகரன், கே.லோகநாதன், வி.வசந்தி, விஜயகுமார், என்.நடராஜன், எம்.பாரதி, முருகன், ஜி.கமலா, குடியயண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதயகுமார், செயலாளர் ஆனந்தன் ஆகியோர் நன்றி கூறினர்.

பின்னர் கலெக்டர் சிவன் அருள் நிருபர்களிடம் கூறுகையில், பருத்தி விவசாயிகளுக்கு உடனுக்குடன் பணம் வழங்க கோரி உள்ளேன். உழவர் சேவை சங்கத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story