வேடசந்தூர் அருகே, லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்ற தம்பதி கைது - பிரிண்டர், மடிக்கணினி பறிமுதல்
வேடசந்தூர் அருகே லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். பிரிண்டர், மடிக்கணினி பறிமுதல் செய்யப் பட்டது.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஜெருசேலம் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 33). அவரது மனைவி கார்த்திகா (28). இவர்கள், வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்கள் அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை அச்சடித்து வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இளவரசன் தலைமையிலான போலீசார் விட்டல்நாயக்கன்பட்டியில் உள்ள ஈஸ்வரன் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
அப்போது வெளி மாநில லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதனையடுத்து லாட்டரி சீட்டுகள் அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட பிரிண்டர், மடிக்கணினி மற்றும் லாட்டரி சீட்டுகள், ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்ததாக ஈஸ்வரன் அவரது மனைவி கார்த்திகா ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈஸ்வரனை வேடசந்தூர் சிறையிலும், கார்த்திகாவை திண்டுக்கல் சிறையிலும் அடைத்தனர். வேடசந்தூர் அருகே லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்து வந்த தம்பதி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story