சேர்ந்தமரம் அருகே, கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சேர்ந்தமரம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுரண்டை,
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள குலசேகரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெண்ணி உடையார். இவரது மகள் முப்புடாதி (வயது 19). இவர் நெல்லையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கடந்த 21-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து முப்புடாதி விடுதியில் இருந்து 21-ந் தேதி வீட்டிற்கு வராமல் நேற்று முன்தினம் வந்துள்ளார்.
இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த முப்புடாதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சேர்ந்தமரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். முப்புடாதியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேர்ந்தமரம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story