கயத்தாறில் விபத்து: பெண் பலி; தம்பதி படுகாயம் - நாற்கரசாலை ஓடை பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது


கயத்தாறில் விபத்து: பெண் பலி; தம்பதி படுகாயம் - நாற்கரசாலை ஓடை பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியது
x
தினத்தந்தி 23 Dec 2019 10:45 PM GMT (Updated: 23 Dec 2019 6:48 PM GMT)

கயத்தாறில் நாற்கரசாலை ஓடை பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். தம்பதி படுகாயம் அடைந்தனர்.

கயத்தாறு,

மதுரை மாவட்டம் அய்யனார்புரம் முத்துபட்டியைச் சேர்ந்தவர் சுரே‌‌ஷ்குமார் (வயது 46). இவருடைய மனைவி சிந்து (43). சுரே‌‌ஷ்குமார், மதுரையில் புதிதாக தொழில் தொடங்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து அவர் தன்னுடைய மனைவியுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார்.

அப்போது அவர்கள், சிந்துவின் அக்காளான கோவை பி.என்.புதூரைச் சேர்ந்த சசிரேகாவையும் (53) தங்களுடன் காரில் அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். சுரே‌‌ஷ்குமார் காரை ஓட்டினார்.

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் அருகில் நாற்கரசாலை ஓடை பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சசிரேகா, சுரே‌‌ஷ்குமார், சிந்து ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சசிரேகா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுரே‌‌ஷ்குமார், சிந்து ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story