தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த மோடியின் பேச்சு ஆச்சரியமளிக்கிறது - சரத்பவார் பேட்டி


தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த மோடியின் பேச்சு ஆச்சரியமளிக்கிறது - சரத்பவார் பேட்டி
x
தினத்தந்தி 24 Dec 2019 4:30 AM IST (Updated: 24 Dec 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த பிரதமர் மோடியின் பேச்சு ஆச்சரியமளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.

மும்பை, 

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் பற்றி தனது அரசு ஆலோசிக்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அசாமில் மட்டுமே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மும்பையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மோடியின் பேச்சு எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு பெரிய கொள்கையை நிறைவேற்றும்போது, அரசு மட்டத்தில் விவாதத்திற்கு பின்னரே அது கொண்டு வரப்படுகிறது. விவாதம் இன்றி கொண்டுவரப்படுவது இல்லை. நாடு முழுவதும் குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வருவோம் என்று நாட்டின் உள்துறை மந்திரி அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூட குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் அரசின் திட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். ஜனாதிபதியின் உரை அரசின் திட்டத்தை பிரதிபலிக்கிறது. ஆனால், இந்த திட்டம் குறித்து அரசு எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்று பிரதமர் கூறுவது சரியல்ல. மத்திய அரசு அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. இதுபோன்ற சூழலில் மக்கள் மத்தியில் பிரச்சினைகளை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இப்படியெல்லாம் பேசுகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாரதீய ஜனதா பணபலத்தை பயன்படுத்தியது. ஆனால் மக்கள் அதை நிராகரித்து விட்டார்கள்.

அந்த மாநில மக்கள் பாரதீய ஜனதாவை ஏற்றுக்கொள்ளாததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். வளர்ச்சி பணிகளை புறக்கணித்தது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை தான் பாரதீய ஜனதா தோல்விக்கு காரணம் என்று ஜார்கண்ட் மாநில எனது கட்சி நிர்வாகிகள் என்னிடம் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story