உத்தவ் தாக்கரேயை முகநூலில் விமர்சித்த வாலிபரை தாக்கி மொட்டை அடித்தனர் - சிவசேனா தொண்டர்கள் ஆவேசம்


உத்தவ் தாக்கரேயை முகநூலில் விமர்சித்த வாலிபரை தாக்கி மொட்டை அடித்தனர் - சிவசேனா தொண்டர்கள் ஆவேசம்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:45 AM IST (Updated: 24 Dec 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

உத்தவ் தாக்கரேயை விமர்சித்து முகநூலில் கருத்து கூறிய வாலிபரை சிவசேனாவினர் தாக்கி, மொட்டை அடித்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை, 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கடந்த 15-ந்தேதி டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவம் ஜாலியன் வாலாபாக் படுகொலையை நினைவுப்படுத்துவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்து கூறியிருந்தார்.

இது குறித்து மும்பை வடலா சாந்திநகரை சேர்ந்த ஹிராமனி திவாரி(வயது30) என்ற வாலிபர் கடந்த 19-ந்தேதி ‘ராகுல் திவாரி’ என்ற பெயரிலான முகநூல் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஹிராமனி திவாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக விமா்சித்து கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவருக்கு மிரட்டல்கள் வந்ததை அடுத்து அவர், அந்த பதிவை நீக்கிவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சாமாதன் சுக்தேவ், பிரகாஷ் கஸ்பே ஆகியோர் தலைமையில் சிவசேனாவினர் ஹிராமனி திவாரியின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, சிவசேனாவினர் ஹிராமனி திவாரியை தாக்கி, அவருக்கு மொட்டை அடித்து உள்ளனர். சிவசேனாவினர் வாலிபரை தாக்கி, மொட்டை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிவசேனாவினரால் தாக்கப்பட்ட வாலிபர் கூறுகையில், ‘‘நான் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பில் இருந்தவன். எனது கருத்துகளை தான் நான் கூறியிருந்தேன். என்னை தாக்கிய சிவசேனாவினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேஸ்புக் பதிவுக்காக சட்டத்தை கையில் எடுத்து கொண்டு என்னை தாக்கிய கும்பல், அதற்கு பதிலாக சட்ட ரீதியாக என் மீது நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும்’’ என்றார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இந்த விவகாரத்தில் இருதரப்பினரும் சமாதானமாக சென்றுவிட்டனர். எனினும் சம்பவம் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Next Story