கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் தேர்தல் பணிகள் மும்முரம்


கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் தேர்தல் பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 7:58 PM GMT)

கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களிலும் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து வாக்குப்பதிவு மையங்களை தேர்தல் பார்வையாளர் வெங்காடசலம் ஆய்வு செய்தார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிரு‌‌ஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, கடவூர் ஆகிய 8 ஒன்றியங்களில் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன. இதையொட்டி ஆறுநிலை வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வாக்குப்பதிவு நாளின் போது மேற்கொள்ள வேண்டி பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் வாக்குப்பதிவு அலுவலர்களின் உறவினர்கள் யாரேனும் தேர்தல் போட்டியிட்டால் கூட நடுநிலை தவறாமல் பாரபட்சமின்றி பணியாற்ற வேண்டும், வாக்குச் சீட்டு முறையில் தான் வாக்குப்பதிவு நடக்கிறது என்பதால் கிராம இளைஞர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வாக்கு செலுத்த வருகிற போது அவர்களுக்கு வாக்கு செலுத்துவது எவ்வாறு? என்பது பற்றி உரிய வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பணிகள் மும்முரம்

மேலும் கரூர் உள்பட 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தேர்தல் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெண்ணைமலையில் உள்ள கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசந்திரன் மேற்பார்வையில் பணியாளர்கள் வாக்குப்பதிவுக்கான பொருட்களாக பேனா, பென்சில், ரப்பர், பசை, குண்டூசி, சிறிய கத்தி, சணல், நூல்கண்டு போன்றவற்றை தனித்தனியாக பிரித்து வாக்குப்பெட்டியினுள் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு பொருட்கள் அடங்கிய வாக்குப்பெட்டியை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்ல சாக்குகள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த சாக்குகளில் விவரங்களை குறிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தாந்தோணி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குச்சாவடி எண், உள்ளே, வெளியே, வாக்கு செலுத்தும் இடம் போன்ற வாசகங்களை வெள்ளை தாளில் பெண் தொழிலாளர்கள் அச்சு எடுத்து கொண்டிருந்தனர். வாக்குச்சாவடியில் தேர்தலையொட்டி இந்த தாள் ஒட்டப்படுவதால் வாக்கு செலுத்த வருபவர்கள் இதனை படித்து தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுவதற்கு வழிவகையாக இருக்கும் என வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகரன் தெரிவித்தார்.

இதேபோல், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் தபால் வாக்கினை பதிவு செய்வதற்கு ஏதுவாக அது தொடர்பான படிவங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கரூர், க.பரமத்தி, தாந்தோணி, அரவக்குறிச்சி ஒன்றியங்களுக்கான தபால் வாக்குப்பெட்டிகள் கரூர் ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரும்பு வாக்கு பெட்டிகளை போல் அல்லாமல், தபால் வாக்குப்பெட்டிகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பார்வையாளர் ஆய்வு

கரூர் மற்றும் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்கு பதிவு மையங்களுக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள் தயார் நிலையில் உள்ளதா? என்று கரூர் மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர் என்.வெங்கடாச்சலம் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story