ஜனாதிபதி வருகையையொட்டி போலீசார் கட்டுப்பாட்டில் திருநள்ளாறு - வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சோதனை


ஜனாதிபதி வருகையையொட்டி போலீசார் கட்டுப்பாட்டில் திருநள்ளாறு - வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் சோதனை
x
தினத்தந்தி 24 Dec 2019 4:15 AM IST (Updated: 24 Dec 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், இன்று (செவ்வாய்க் கிழமை) காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம் செய்யவுள்ளதையொட்டி, போலீசார் கட்டுப்பாட்டில் திருநள்ளாறு கொண்டுவரப்பட்டது. ஜனாதிபதி செல்லும் பாதைகளில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

காரைக்கால், 

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 27-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார். இன்று(செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி லாஸ்பேட்டை விமானத்தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படுகிறார். காலை 10.20 மணிக்கு, காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து இறங்குகிறார். ஜனாதிபதியுடன், அவரது மனைவி, மகள் மற்றும் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி, முதல் அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் வருகின்றனர்.

ஹெலிகாப்டர் தளத்தில், புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் விக்ராந்த்ராஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால் ஆகியோர் வரவேற்கின்றனர். சிறிது தூரத்திற்கு பிறகு, எம்.எல்.ஏ.க்கள் திருமுருகன், சந்திரபிரியங்கா, அசனா, கீதா ஆனந்தன், துணை ஆட்சியர் ஆதர்ஷ் ஆகியோர் வரவேற்கின்றனர்.

பின்னர் அங்கிருந்து, கார் மூலம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு, வி.ஐ.பிக்கள் செல்லும் பாதை வழியாக கோவிலுக்கு செல்கிறார். கோவிலில், திருவாரூர் ஆதீனம், கலெக்டர் மற்றும் கோவில் தனி அதிகாரி விக்ராந்த்ராஜா, கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் ஆகியோர் வரவேற்று, கணபதி, முருகன், அம்பாள், தர்பாரண்யேஸ்வரர், சனிபகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்கிறார். 12 மணிக்கு மேல் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து சென்னை செல்லும் ஜனாதிபதி அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால் தலைமையில், உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

திருநள்ளாறு ஹெலிகாப்டர் தளத்திலிருந்து, கோவில் வரை சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பில் உள்ளனர். ஹெலிகாப்டர் தளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி, சாலை மற்றும் கோவில் உள்ளே வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, கடந்த இரு நாட்களாக, ஹெலிகாப்டர் தளத்திலிருந்து ஜனாதிபதி வந்து இறங்குவது போலவும், கோவிலுக்கு செல்வது போலவும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று தர்பாரண்யேஸ்வரர் கோவில் அருகே யாரும் செல்லாத வகையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நேற்று மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால் ஆகியோர் ஏராளமான போலீசாருடன், ஹெலிகாப்டர் தளம், கோவில் உள்ளே ஆய்வு நடத்தி, ஜனாதிபதி சாமி தரிசனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

ஆய்வைத்தொடர்ந்து, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநள்ளாறுக்கு வருகை தரும் ஜனாதிபதியை பாதுகாப்பாக வரவேற்கவும், தொடர்ந்து சாமி தரிசனம் செய்யவும் மாவட்ட நிர்வாகத்துடன் போலீசார் இணைந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளது. 500க்கும் மேற்பட்ட மத்திய சிறப்பு அதிரடி போலீசார், புதுச்சேரி, தமிழக மற்றும் காரைக்கால் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஏற்கனவே ஓட்டல், விடுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது. 2 நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. திருநள்ளாறு போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி வந்து செல்லும்வரை பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம் என்றார்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜெயில்சிங் வருகை தந்தார். அதன் பிறகு தற்போதைய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story