காரைக்கால் அருகே, வீடு புகுந்து நகைகள் திருடிய 3 பேர் கைது - சிறையில் அடைப்பு


காரைக்கால் அருகே, வீடு புகுந்து நகைகள் திருடிய 3 பேர் கைது - சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 24 Dec 2019 4:00 AM IST (Updated: 24 Dec 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் அருகே வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காரைக்கால், 

காரைக்காலை அடுத்த நெடுங்காடு குரும்பகரம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகண்ணன். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் வீட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடினர். தப்பி ஓடும் போது, வீட்டில் தூங்கிகொண்டிருந்த விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி உள்ளிட்ட 9 பவுன் தங்க நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.

இது குறித்து விஜயலட்சுமி நெடுங்காடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மேலகாசாக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தபோது, அவர்கள் கடலூர் மாவட்டம் கத்தாழை பகுதியை சேர்ந்த சுரேஷ்(வயது32), காட்டுமன்னார்கோவில் குமராட்சி அன்பழகன்(62), திருவிடை மருதூர் வடகுடி ரவி(40) என்பதும், கடந்த 4.9.2018 அன்று நெடுங்காடு குரும்பகரம் விஜயலட்சுமி என்பவரது வீட்டில், நகை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். சுரேஷ் மற்றும் அன்பழகன் ஆகியோரிடமிருந்து 9 பவுன் நகைகளை பறிமுதல் செய்து, காரைக்கால் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் முன் ஆஜர்படுத்தி, புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

Next Story