திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 22 லட்சத்து 47 ஆயிரம் வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியீடு


திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 22 லட்சத்து 47 ஆயிரம் வாக்காளர்கள் வரைவு பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 24 Dec 2019 4:30 AM IST (Updated: 24 Dec 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 22 லட்சத்து 47 ஆயிரம் வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

திருச்சி,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், திருச்சி மாவட்டத்தில் 1.1.2020-ம் தேதியை தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு, கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 6-ந் தேதிவரை பெறப்பட்ட படிவங்களின் (படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ) அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தம் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தன.

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி மற்றும் துறையூர் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு வெளியிட்டார்.

22 லட்சத்து 47 ஆயிரம் வாக்காளர்கள்

அப்போது கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்காளர் வரைவுப் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 96 ஆயிரத்து 30 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 51 ஆயிரத்து 630 பேரும், திருநங்கைகள் 195 பேர் என மொத்தம் 22 லட்சத்து 47 ஆயிரத்து 855 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தங்கள், உரிய கள விசாரணை செய்து சேர்த்தல், நீக்கல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 4,930 ஆண்கள், 5,358 பெண்கள், 5 திருநங்கைகள் என மொத்தம் 10 ஆயிரத்து 293 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 4,027 ஆண்கள், 4,588 பெண்கள் மற்றும் 2 திருநங்கைகள் என மொத்தம் 8,617 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடிகளில் அலுவலக நேரத்தில் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான ஆட்சேபனைகளை ஜனவரி(2020) 22-ந் தேதி வரை தெரிவித்துக்கொள்ளலாம்.

சிறப்பு முகாம்

மேலும், அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மூலம் படிவம் 6,7,8 மற்றும் 8ஏ பெறப்படும். வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்கள் வருகிற ஜனவரி 4-ந் தேதி(சனிக்கிழமை), 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 11-ந் தேதி(சனிக்கிழமை), 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.

ஜனவரி 22-ந் தேதி வரை சிறப்பு சுருக்க முறை திருத்தங்களின்போது பெறப்பட்ட அனைத்து மனுக்களின் பேரில், ஆட்சேபனைகள் பெறப்பட்டு, உரிய விசாரணை செய்து, பிப்ரவரி 3-ந் தேதி இறுதி செய்யப்பட்டு துணை வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 11-ந் தேதி அன்று தயாரிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ந் தேதி அன்று வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story