மாமல்லபுரத்திற்கு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுற்றுலா வருகை - குடும்பத்துடன் புராதன சின்னங்களை கண்டு ரசித்தார்


மாமல்லபுரத்திற்கு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுற்றுலா வருகை - குடும்பத்துடன் புராதன சின்னங்களை கண்டு ரசித்தார்
x
தினத்தந்தி 23 Dec 2019 11:00 PM GMT (Updated: 23 Dec 2019 8:26 PM GMT)

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி நேற்று மாமல்லபுரத்திற்கு அவரது குடும்பத்துடன் சுற்றுலா வந்தார். அங்கு புராதன சின்னங்களை கண்டுகளித்து தனது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.

மாமல்லபுரம்,

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகிய தலைவர்கள் வருகை தந்த பிறகு மாமல்லபுரத்தின் புகழ் சர்வதேச அளவில் பரவி உள்ளதால், இங்குள்ள புராதன சின்னங்களை கண்டுகளிக்க பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய பிரமுகர்கள், பல மாநிலங்களை சேர்ந்த கவர்னர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள் மாமல்லபுரம் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதேபோல் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் நாள்தோறும் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப்சாஹி மாமல்லபுரத்திற்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா வந்தார். அப்போது அவர் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்த்து ரசித்தார். மேலும் அவர், கலங்கரை விளக்கத்தில் உள்ள கடல்சார் அருங்காட்சியகத்திற்கு சென்று அங்கு பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பழங்கால பொருட்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்தார்.

அதேபோல் வெண்ணை உருண்டை பாறை, கணேசரதம், பஞ்சபாண்டவர் மண்டபம், கிருஷ்ணமண்டபம், மற்றும் குடைவரை கோவில்களில் உள்ள சிற்பங்களையும் குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

அவருக்கு மாமல்லபுரம் நகரின் வரலாற்று சிறப்புகளையும், பல்லவர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்குறித்தும் சுற்றுலா வழிகாட்டி கொ.சி.வரதராஜன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எடுத்து விளக்கினார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வருகையை முன்னிட்டு, மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Next Story