சிவகங்கை மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


சிவகங்கை மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 23 Dec 2019 10:30 PM GMT (Updated: 23 Dec 2019 8:38 PM GMT)

மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 36 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமபிரதீபன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுந்தரராஜன் ஆகியோர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகளாக அ.தி.மு.க சார்பில் ரமேஷ், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, பா.ஜ.க. மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், பொதுச்செயலாளர் சண்முகம், நகர தலைவர் தனசேகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், தேசிய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பெரோஸ்காந்தி, இந்திய கம்யூனிஸ்ட்டு சார்பில் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அரசியல் கட்சியினர் சார்பில் உள்ளாட்சி தேர்தலின் போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும், திருப்புவனம் பகுதியில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான எல்கை, மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்கள் வருவதாகவும், இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகும் நிலை உள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கையின் போது விரைவாக வாக்கு எண்ணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிவகங்கை நகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஊராட்சி ஒன்றிய பகுதியும் சேர்ந்து வருவதாகவும், எனவே அதை தனியாக பிரிக்க வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம் செய்ய வருபவர்களை நன்கு விசாரித்து உறுதி செய்த பின்னரே சேர்க்க வேண்டும் என்றும், இறந்த வாக்காளர்களின் பெயரை உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:-

இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பகுதி பதற்றமானவை, எந்த வாக்குச்சாவடிக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தால் அங்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் வரைவு வாக்காளர் பட்டியலை அவர் வெளியிட அதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக்கொண்டனர்.

தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 60 ஆயிரத்து 992 ஆண்களும், 5 லட்சத்து 75 ஆயிரத்து 696 பெண்களும், இதர வாக்காளர்கள் 56 பேரும் சேர்த்து மொத்தம் 11 லட்சத்து 36 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை(தனி) ஆகிய 4 சட்ட சபை தொகுதிகள் உள்ளது. இந்த சட்டசபை தொகுதி வாரியாக உள்ள வாக்காளர்களின் விவரம் வருமாறு;-

காரைக்குடி தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 263 பேரும், பெண்கள் 1 லட்சத்து 53 ஆயிரத்து 89 பேர்களும், மற்றவர்கள் 42பேரும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 394 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் திருப்பத்தூர் தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 39 ஆயிரத்து 213 பேரும், பெண்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 544 பேரும், மற்றவர்கள் 10 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 767 வாக்காளர்கள் உள்ளனர்.

சிவகங்கை தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 41 ஆயிரத்து 652 பேரும், பெண்கள் 1 லட்சத்து 45 ஆயிரத்து 680 பேரும், மற்றவர்கள் 2 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 334 வாக்காளர்கள் உள்ளனர். மானா மதுரை(தனி) தொகுதியில் ஆண்கள் 1 லட்சத்து 30ஆயிரத்து 864 பேரும், பெண்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 383 பேரும், மற்றவர்கள் 2 பேரும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 249 வாக்காளர்கள் உள்ளனர். 

Next Story