குடும்பத்தகராறில், ஆட்டோவை ஏற்றி மாமனாரை கொன்ற வாலிபர் கைது


குடும்பத்தகராறில், ஆட்டோவை ஏற்றி மாமனாரை கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Dec 2019 3:45 AM IST (Updated: 24 Dec 2019 10:31 PM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறில் ஆட்டோவை ஏற்றி மாமனாரை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாலக்காடு,

திருச்சூர் மாவட்டம் சிற்றளப்பள்ளியை சேர்ந்தவர் சுனில் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அனிதா. இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையொட்டி அனிதாவின் தந்தை ராமு (67) மகள் வீட்டுக்கு வந்து சுனிலை கண்டித்து வந்துள்ளார்.

இதையொட்டி இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சுனில் தனது மனைவியை தாக்கிக்கொண்டு இருப்பதாக ராமுவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராமு அவருடைய வீட்டுக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோ கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினார்.

பின்னர் அவர் வீட்டில் இருந்து வெளியேறி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஆட்டோ கண்ணாடியை உடைத்ததால் ஆத்திரம் அடைந்த சுனில் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ராமு மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரமங்களம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுனிலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் ஆட்டோவை ஏற்றி மாமனாரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story