கூடலூரில் அறுவடை எந்திரம் தட்டுப்பாடு: திடீர் மழையால் நெற்கதிர்களை பாதுகாக்க போராடும் விவசாயிகள்
கூடலூரில் அறுவடை எந்திரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாலும் திடீர் மழை பெய்வதாலும் நெற்கதிர்களை பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகிறார்கள். இதனால் வேளாண்மை துறை அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் கூடலூர் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதை பயன்படுத்தி கூடலூர் பகுதியில் உள்ள தொரப்பள்ளி, குனில், புத்தூர்வயல், அள்ளூர்வயல், பாடந்தொரை மற்றும் ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்படுகிறது. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியிலும் நெல் விளைவிக்கப்படுகிறது.
சிந்தாமணி, மரநெல், அடுக்கை, பாரதி, கந்தகசால் என நாட்டு ரகங்களை இயற்கை முறையில் பயிரிட்டு வருகின்றனர். விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து தங்களது வீட்டு தேவைக்கு வைத்து கொள்கின்றனர். பின்னர் மீதமுள்ள கதிர்களை கேரள மொத்த வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கேரளா மற்றும் கூடலூர் பகுதியில் பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்து வருகிறது. இதனால் நெல் விளைச்சலும் அதிகரித்துள்ளது.
நடப்பு ஆண்டில் கேரளா, தமிழகம், கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் பருவமழை பரவலாக பெய்துள்ளது. இதனால் நெல் விவசாயம் களை கட்டி உள்ளது. இதனால் நெல் அறுவடை எந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் கூடலூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விளைந்த கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்தது.
தற்போது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அறுவடை எந்திரங்கள் சென்று விட்டன. இதனால் கூடலூர் பகுதியில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு, திடீர் என மழை பெய்யும் காலநிலை நிலவுதல் விளைந்த நெற்கதிர்களை உரிய காலத்தில் அறுவடை செய்ய முடியாமலும், அதனை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். மேலும் கூலித்தொழிலாளர்களும் போதிய அளவு கிடைப்பது இல்லை.
தற்போது சேலத்தில் இருந்து தனியார் எந்திரம் ஒன்று வந்து நெல் அறுவடை செய்து வருகிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைந்த நெற்கதிர்களை ஒரு எந்திரம் கொண்டு விரைவாக அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இதைத்தடுக்க கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள அறுவடை எந்திரங்களை வரவழைக்க வேண்டும் என கூடலூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- நெல் அறுவடை எந்திரங்கள் தட்டுப்பாடு உள்ளது குறித்து கடந்த 4 ஆண்டுகளாக கூடலூரில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சீசன் காலத்தில் கோவை வேளாண் கல்லூரியில் உள்ள அறுவடை எந்திரத்தை கூடலூர் பகுதிக்கு கொண்டு வந்து நியாயமான விலையில் விவசாயிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு மட்டுமே வேளாண் பொறியியல் துறை செயல்பட்டு வருகிறது. எனவே விவசாயிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு வேளாண்மை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story