திடக்கழிவு மேலாண்மை பணிள்: ரூ.447 கோடிக்கு, ஸ்பெயின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணி ஆணை வழங்கினார்


திடக்கழிவு மேலாண்மை பணிள்: ரூ.447 கோடிக்கு, ஸ்பெயின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பணி ஆணை வழங்கினார்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:45 PM GMT (Updated: 24 Dec 2019 5:34 PM GMT)

திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள ரூ.447 கோடிக்கு ஸ்பெயின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான பணி ஆணையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

சென்னை,

திடக்கழிவு மேலாண்மை துறையில் வீடுகளில் திடக்கழிவுகளை சேகரித்து, குப்பை கொட்டும் வளாகத்துக்கு கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு செயல்திறன் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தமிழகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அரசு பல முன்னோடி நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அவற்றில், முக்கியமானது திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை திறம்பட கையாளுதல் ஆகும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குப்பை தரம் பிரித்து அளிக்கவும், குப்பைகளை மறு உபயோகம் செய்தல் மற்றும் மறு சுழற்சிக்குட்படுத்தி குப்பை உருவாகும் அளவினை குறைக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 7 மண்டலங்களில், சுமார் 9 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், வருடத்திற்கு ரூ.447 கோடி மதிப்பீட்டில், திடக்கழிவு மேலாண்மை பணிகளை செய்ய ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த தனியார் நிறுவனம் உட்பட 2 நிறுவனங்களுக்கு 8 ஆண்டுகள் அனுமதி அளித்து பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் குப்பை அளவீட்டு முறையில் கணக்கிடப்பட்டு பணப்பட்டுவாடா செய்வதற்குப் பதிலாக, இந்தியாவிலேயே முதல் முறையாக திடக்கழிவு மேலாண்மைத் துறை பணிகளில் செயல்திறன் அடிப்படையில் பணப்பட்டுவாடா செய்தல் என்ற முறைப்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 7 மண்டலங்களில் அனைத்து வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகள் முறைப்படி தரம் பிரிக்கப்படும். அவ்வாறு தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள், குப்பை பதனிடு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

இந்த தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை, பதனிடும் வளாகத்துக்கு கொண்டு சேர்த்தல், பொது மக்களிடம் பெறப்படும் புகார்களை 12 மணி நேரத்திற்குள் சரிசெய்தல் உள்ளிட்ட 34 செயல்திறன் குறியீடுகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்படும். மேலாண்மை தகவல் அமைப்பு மூலம் குப்பை தொட்டிகளில் குப்பை அகற்றுதல் மற்றும் வாகனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். சாலைகள், மக்கள் பெருமளவில் கூடும் இடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி குப்பைகள் இல்லாத நிலையை உறுவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், துணை கமிஷனர்கள் பி.குமாரவேல் பாண்டியன், பி.மதுசுதன் ரெட்டி, பி.ஆகாஷ், பி.என்.ஸ்ரீதர், தனியார் நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story