கடன் தொல்லையால் தகராறு: பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கள்ளக்காதலனும் சாவு


கடன் தொல்லையால் தகராறு: பெண் தீக்குளித்து தற்கொலை காப்பாற்ற முயன்ற கள்ளக்காதலனும் சாவு
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 7:20 PM GMT)

திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கள்ளக்காதலனும் பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் மஞ்சு (வயது 38). இவரது கணவர் நாகராஜ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி அங்கேயே படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மஞ்சுவுக்கு திருவள்ளூரை அடுத்த புட்லூரை சேர்ந்த மருந்து விற்பனையாளரான சித்தார்த் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சித்தார்த்திற்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் இவர்களின் நட்பு போகப்போக மேலும் நெருக்கமானது. இதைத் தொடர்ந்து இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். மஞ்சு பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கி குடும்பம் நடத்தி வந்தார். வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டு அவரை பலமுறை தொல்லை கொடுத்து வந்தனர்.

இதை அறிந்த சித்தார்த் ஏன் இவ்வாறு வட்டிக்கு பணம் வாங்கினாய் என்று கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கிடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சு வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதை கண்ட சித்தார்த் ஓடிச்சென்று தீயை அணைக்க முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் அவர்கள் இருவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் மஞ்சு, சித்தார்த் இருவரும் பரிதாபமாக இறந்து போனார்கள்.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story