மணப்பாறை அருகே கும்மியடித்து தேர்தல் பிரசாரம் செய்த பெண்கள்


மணப்பாறை அருகே கும்மியடித்து தேர்தல் பிரசாரம் செய்த பெண்கள்
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 7:26 PM GMT)

மணப்பாறை அருகே பெண்கள் கும்மியடித்து தேர்தல் பிரசாரம் செய்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள அந்த நல்லூர், மணிகண்டனம், மணப்பாறை, மருங்காபுரி, மையம்பட்டி, திருவெறும்பூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

இதனால் இங்கு களத்தில் உள்ள வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பலமுனை போட்டி

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மோதும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு பலமுனை போட்டி நிலவுகிறது. அவர்களை ஆதரித்து முக்கிய அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் கட்சி சின்னங்களுக்கு அப்பாற்பட்டு போட்டியிடும் கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களது கிராமங்களில் வித்தியாசமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாலை முதல் இரவு நேரம் இடைவிடாமல் ஒவ்வொரு கிராமமாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

கும்மியடித்த பெண்கள்

மணப்பாறையை அடுத்த முத்தப்புடையான்பட்டியில் நேற்று காலை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தேர்தல் பிரசாரம் களை கட்டியது. தப்பாட்டம் காதை பிளக்க கையில் கொடிகளை ஏந்திக் கொண்டு ஒருவர் நடனம் ஆட பெண்கள் கும்மியடித்து தங்களின் நடனத்தை வெளிப்படுத்தினர். இப்படியாக பல்வேறு இடங்களிலும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.

Next Story