தர்மபுரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக ரோட்டரி திருமண மண்டபத்திற்கு ‘சீல்’ வைப்பு


தர்மபுரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக ரோட்டரி திருமண மண்டபத்திற்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 7:31 PM GMT)

தர்மபுரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக ரோட்டரி திருமண மண்டபத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி 4-ரோடு அருகே கிரு‌‌ஷ்ணகிரி ரோட்டின் மேற்கு பகுதியில் பழைய வட்டார வளர்ச்சி காலனி உள்ளது. இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ரோட்டரி சங்கத்தின் மூலம் அந்த பகுதியில் திருமண மண்டபம் கட்டப்பட்டது. அந்த மண்டப வளாகத்தையொட்டி கட்டப்பட்ட இணைப்பு கட்டிடத்தில் ரோட்டரி தையல் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் அந்த திருமண மண்டபம் மற்றும் தையல்பயிற்சி மையம் அமைந்துள்ள இடம் வட்டார வளர்ச்சி காலனிக்கு சொந்தமான அரசு இடம் என்று ஆவணங்கள் மூலமாக கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த திருமண மண்டபம் மற்றும் தையல் பயிற்சி மையம் ஆகியவற்றை காலி செய்து அரசிடம் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருக்கு வருவாய்த்துறையினர் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

பூட்டி ‘சீல்’ வைப்பு

இந்த நிலையில் நேற்று இரவு அந்த பகுதிக்கு தர்மபுரி தாசில்தார் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் சுதாகரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்த்துறையினர் சென்றனர். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த திருமண மண்டபம் மற்றும் தையல் பயிற்சி மையத்தை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக ரோட்டரி திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story